Sunday, May 27, 2012

அருவி

video



உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

--கவிநயா

பி.கு. : 2007-ல் 'அன்புடன்' குழுமத்தில் இருந்த போது படக் கவிதைப் போட்டிக்காக எழுதி, வாசித்து, பரிசும் பெற்ற கவிதை. மணி சார் என்பவர் என்னுடைய ஆடியோவை நயாகரா அருவி வீடியோவில் சேர்த்து உதவினார். என்ன பரிசுன்னு நினைவில்லை; ஆனா முதல் பரிசு இல்லை! படத்தில் இருப்பது நானும் இல்லை! :)

Tuesday, May 22, 2012

நம்ம ஊரப் போல வருமா?


நலம். நலமறிய ஆவல் :)

ஊரிலிருந்து வந்தவுடனே நடன பள்ளி ஆண்டு விழா வேலைகள் வந்திடுச்சு. உங்களையெல்லாம் பார்க்க இப்போதான் நேரம் கிடைச்சது.

அவள் அருளால் நல்லபடியாக வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரையை முடிச்சாச்சு. மதுரையில் தேர்த் திருவிழா பார்த்தாச்சு. காரைக்குடி கொப்புடையாளையும், திருவொற்றியூர் வடிவுடையாளையும், முதல் முறையா பார்த்தாச்சு. அம்மா வீட்ல நல்லா சாப்ட்டு சாப்ட்டு தூங்கி எழுந்தாச்சு. வேற வழியில்லாம, பொழைக்கிற ஊருக்கு திரும்பியும் வந்தாச்சு!

ஊருக்கு போறப்பல்லாம் மயிலாப்பூர்லதான் நிறைய வேலை இருக்கும். ஒவ்வொரு முறை போற போதும் கற்பகாம்பாளைப் பார்த்துடறது வழக்கம். இந்த தரம் 3 முறை பார்த்தேன், அவளை! இரண்டாவது முறை போகும் போது சில குழும நண்பர்களை அங்கே சந்திக்கலாம்னு போனேன். ஆனா அன்றைக்கு பிரதோஷமாம். சரியான கூட்டம். யாரையும் பார்க்கவோ போனில் பிடிக்கவோ கூட முடியல. சமர்த்தா வரிசையில் நின்னு சாமி கும்பிட்டேன்; வரிசையில் நிற்கும் போதே பார்க்க வந்தவங்களை (தற்செயலாதான்) எதிர் வரிசையில் பார்த்து ஹலோ சொன்னதோட சரி. அப்புறம் இருட்டிடுச்சு, தனியா ரொம்ப தூரம் போகணுமேன்னு கிளம்பிட்டேன். யாரோடயும் பேச முடியல.

ஆனா அன்றைக்குக் காலையில் அப்பாவோட நம்ம சுப்பு தாத்தா வீட்டுக்கு போயிருந்தேன். அப்பாடி, எங்க வீட்டிலிருந்து அவங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அரை நாள் ஓடிப் போச்சு! சுப்பு தாத்தாவையும், மீனாட்சி பாட்டியையும் பார்த்த பிறகு அந்த சிரமமெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு ஆயிருச்சு. ஆரம்பத்தில் நான் போறதாவே இல்லை; நேரம் ரொம்ப சுருக்கமா இருந்ததால.... ஆனா அவரோட தொலை பேசின போது, "தையல் நாயகிக்கு புடவை வாங்கி வச்சிருக்கேனே... வர முடியாதா, சரி பரவாயில்லை என்ன பண்றது?"அப்படின்னு சொன்னார். அதான் மனசு கேட்காம, உடனே கிளம்பிட்டேன்.

தாத்தாவும் பாட்டியும் தங்களோட அன்பால எங்களை திக்கு முக்காட வச்சுட்டாங்க. வெண்பொங்கலும், இனிப்பும், காரமும், சுடச் சுட காபியும் குடுத்தாங்க. சுப்பு தாத்தா ஒரு குட்டி computer lab வச்சிருக்கார்! தாத்தாவும் பாட்டியும் தங்களோட ‘ஓய்வு பெற்ற பின்’ வாழ்க்கை அனுபவங்களை வேடிக்கையாக பகிர்ந்துகிட்டாங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்த பிறகு, கிளம்பும் போது பூஜை அறைக்குக் கூட்டிட்டுப் போயி,  தையல்நாயகிக்கு வாங்கி வச்சிருந்த சிகப்புப் புடவையை அழகா பூ, பழத்தோட தாம்பாளத்தில் வச்சு குடுத்தாங்க. கூடவே ஒரு சர்ப்ரைஸ்! எனக்கும் ஒரு பச்சைப் புடவை கிடைச்சது! அவங்க சொன்னபடியே அவளுக்கு புடவை சாற்றின அன்றைக்கே நானும் என் பச்சைப் புடவையை உடுத்திக்கிட்டேன். அன்புக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி தாத்தா, பாட்டீ!

போன முறை கேயாரெஸ் சார்பில் புடவை வாங்கிட்டு போனேன் அவளுக்கு. இந்த முறை சுப்பு தாத்தா சார்பில்!

கீதாம்மா, லலிதாம்மா, வல்லிம்மா, மௌலி, தக்குடு, இவங்களோடல்லாம் தொலை பேசினேன்.

அடுத்த நாள் புதுக்கோட்டைக்கு பயணம். அன்றைக்கு இரவிலிருந்துதான் நடக்கணும்.

என் தங்கையும் நானும் சேர்ந்துதான் பாத யாத்திரை போறதா இருந்தது. எங்க ரெண்டு பேருக்குமே இதுதான் கடைசி வருஷ வேண்டுதல். கெளம்பறதுக்கு ஒரு வாரம் முன்னாடி, என் தங்கை என்னைக் கூப்பிட்டு, சில காரணங்களால் தன்னால் வர முடியாம போகலாம் அப்படின்னு ஒரு பெரீய்ய்ய குண்டைத் தூக்கிப் போட்டுட்டா! டிக்கெட்லாம் எடுத்தாச்சு. இனிமே என்ன பண்ண முடியும்? அவ வரலைன்னா நான் தன்னந்தனியாதான் நடக்கற மாதிரி இருக்கும்; என் வேகத்துக்கு(!) யாரும் பொறுமையா என்னோட கூட வரமாட்டாங்க. அதோட மட்டுமில்லாம, அடுத்த வருஷம் அவ நடந்தாலும், அவளும் தனியாதான் போகணும். ஆனா அவ என்னை விட ‘வாயுள்ள பிள்ளை’; அதனால பரவாயில்லைன்னு வைங்க!

"என்னம்மா இது சோதனை?"ன்னு அவகிட்ட போய் புகார் பண்ணினேன். “நீ என்னை நம்பி வர்றியா, இல்ல உன் தங்கச்சியை நம்பி வர்றியா?”ன்னு அவ கேட்கிற மாதிரி இருந்தது. உடனே ‘கப்சிப்’னு ஆயிட்டேன். அதைப் பற்றி நினைக்கிறதையும் கவலைப் படறதையும் விட்டுட்டேன், ஊருக்கு கிளம்பறதுக்கு முதல் நாள் என் தங்கை மறுபடியும் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, தானும் வர முடியும்னு சொன்னா!  என்ன இருந்தாலும் அவ க்ரேட்தான் இல்ல! 

மறுபடியும் யாத்திரை பற்றி எழுதறதா இருந்தா, கல்லு குத்தக் குத்த, பாதம் வலிக்க வலிக்க, இருட்டில் தடவித் தடவி, மெது....வ்வ்வ்...வாதான் கூட்டிக்கிட்டு போவேன், பிறகு எல்லாரும் என்னைத் திட்டுவீங்க! அதனால ரெண்டு வரி ராமாயணம் மாதிரி சொல்லிட்டு முடிச்சுக்கறேன்: இந்த முறை பாத யாத்திரையின் போது ரோடெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்பவே மோசமா இருந்தது. பவர் கட் வேற.  நாங்க இராத்திரி நேரத்தில் நடக்கறதால, அமாவாசை இருட்டில், பவர் கட்டின் போதெல்லாம் உட்காரவே முடியாம நடந்துகிட்டே இருக்க வேண்டியதா இருந்தது.  அப்படியும் நிறையப் பேர் தூங்கி, ஓய்வெடுத்து, ஓய்வெடுத்துதான் நடந்தாங்க. நாங்க மட்டும் தூங்கவே இல்லை. அதிகபட்சம் அரைமணி நேரம் உட்காருவோம், அவ்வளவுதான். எப்படியோ அவள் அருளால் ரெண்டு பேருமே நல்லபடியா பிரார்த்தனையை நிறைவேற்றிட்டோம்.

போன முறை அம்மா ஒரு இடத்தில் மயங்கி விழுந்து, நாங்க நடையத் தொடருவோமா இல்லையான்னு ஆயிருச்சில்ல, தஞ்சாவூருக்கு முன்னாடி திருக்காவனூர்பட்டி அப்படிங்கிற ஊர்ல? அங்கே எங்க உறவினர்கள்தான் அன்னதானம் செய்யறாங்க. எப்பவும் அங்கே சாப்பிடுவோம். போன வருஷமும் சாப்பிட்டோம். என் அம்மா அப்பாவும் வந்திருந்தாங்க. உறவினர்களை பார்த்தோம். அவங்கதான் ராத்திரி பதினொன்றரை மணிக்கு அம்மாவை உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு போயி, சரியான சமயத்தில் பெரிய உதவி செய்தாங்க. ஆனா, அதே ஊர்ல, இந்த முறை நாங்க போன போது எங்க உறவினர்கள் யாரையுமே பார்க்கல! ஒரே ஒரு தெரிஞ்ச (எங்கேயோ பார்த்த மாதிரி) முகம்தான் இருந்தது. அவருக்கும் எங்களை அடையாளம் தெரியல. ஆனா இதே இடத்தில் போன வருஷம் அத்தனை பேர், சொல்லி வெச்ச மாதிரி இருந்து, அவங்களும் தஞ்சாவூர்க்காரங்களா இருந்து, அம்மாவுக்கு உடனடியான கவனிப்பு தேவையா இருந்த போது உதவினாங்க! நினைச்சுப் பார்த்த போது ஆச்சர்யமாவும் நெகிழ்ச்சியாவும் இருந்தது. என்ன இருந்தாலும் அவ க்ரேட்தான் இல்ல! அவளைப் பற்றி இப்படி நிறைய சொல்லலாம்... இப்போதைக்கு இதோட நிறுத்திக்கிறேன் :)

எல்லாரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, April 8, 2012

ரௌத்திரம் பழகு!

ப்படின்னா என்னன்னு இப்பதான் இலேசா புரிய ஆரம்பிச்ச மாதிரி இருக்கு!

கோபப்பட வேண்டிய விஷயத்துக்கு சரியான நேரத்தில் கோபப்படறதும், தேவையில்லாத விஷயத்தை உடனடியா விட்டுத் தள்ளறதும் மிகவும் அவசியம். ஒருத்தர் நம்மை கேவலமா நடத்தும் போது கோபப்படுவதுதானே நியாயம்? கண் முன்னாடி அநீதி நடக்கும் போது அதை எதிர்ப்பதுதானே தர்மம்? அந்த மாதிரி சமயங்களில் அமைதியா இருந்தா அது கோழைத்தனம்தானே? அதைத்தான் ‘ரௌத்திரம் பழகு’ன்னு சொல்றான், பாரதி.

இதுவே நம்ம தினசரி வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துதுன்னு பார்ப்போம்.

கோபம் என்பது இயல்பான உணர்வு மட்டுமில்லை; சமயத்தில் வாழ்க்கைக்குத் தேவையான உணர்வும் கூட. மற்ற எல்லாவற்றையும் போலவே அதையும் நம்ம கையாளத் தெரிஞ்சுக்கணும். எப்ப கோபப்படணும், எப்படி கோபப்படணும், யார்கிட்ட நம்ம கோபம் செல்லாது, அந்த மாதிரி சமயத்தில் நம்ம அதிருப்தியை எப்படி வெளிப்படுத்தணும், இதெல்லாம் தெரியணும்.

சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்

அப்படின்னு கேள்விப்பட்டிருக்கோம். பாரதி சொல்வதைப் பார்த்தா, கோபம் கூட அப்படித்தான் போலருக்கு. அதுவும் ஒரு மனப் பழக்கம் மாதிரிதான் தெரியுது.

பழக்கம் என்பது என்ன? நாம ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும் போது, அதுவும் நம் மனசறிஞ்சு (conscious-ஆக) செய்யும் போது, அது பழக்கமா மாறிடுது. அப்படி பழக்கமாக மாறும் அந்த செயல் நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச ஒரு செயலாகவும் ஆகுது. அது எப்படி ஆரம்பிக்குது, அதனோட முடிவு என்ன, நடுவில் உள்ள நெளிவு சுளிவுகள் என்ன, இதெல்லாம் ரொம்ப விவரமா நமக்கு புரிய ஆரம்பிக்குது.

எந்த ஒரு விஷயத்தையும் கத்துக்கிறவங்களுக்கு, பயிற்சி செய்யறவங்களுக்கு, இந்த நிலை நல்லாவே புரியும். பயிற்சி செய்யச் செய்ய, எதை எப்படி செய்தா என்ன ஆகும், அதனோட விளைவுகள் என்ன, நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, இப்படி எல்லாமே தெரிய ஆரம்பிக்கும்.

அதே போலத்தான் கோபமும். கோபம் வரும்போதே, நமக்கு கோபம் வருது என்ற உணர்வும், கோபமா இருக்கும் போது, நாம் கோபமா இருக்கோம், அப்படிங்கிற உணர்வும், அந்த சமயத்தில் நாம என்ன செய்யறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்கிற உணர்வும் இருந்துட்டா போதும், கோபம் ஓரளவு நம்ம பழக்கத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். தன்னைத்தானே வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சவங்களுக்கு இது ரொம்ப சுலபம் :)

ரௌத்திரம் பழகு’வதில் இரண்டு விதம் இருக்கு. ஒண்ணு, நிஜமாகவே கோபமா இருக்கும் போது, அதை எப்படி கையாள்றதுன்னு தெரியணும். இரண்டு, கோபம் இல்லாத போது கூட சில சமயம் கோபமா இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டி இருக்கும்; அதுவும் எப்படின்னு தெரியணும்.

‘கோவம் வந்தா என்ன செய்யறேன்னு எனக்கே தெரியறதில்லை.’ அப்படின்னு பலரும் சொல்றதுண்டு. அப்ப என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது என்னவோ தன் தவறு இல்லைங்கிறது போலவும், கோவத்தோட தவறுதான் என்கிறாப் போலவும் பேசுவோம். பல சமயங்களில் கோபத்தில் ஏதேனும் சொல்லிட்டு, அல்லது செய்துட்டு, பின்னாடி ஏகத்துக்கு வருத்தப்படறவங்களும் உண்டு.

கோபப்படும்போது நாம எவ்வளவுக்கெவ்வளவு conscious-ஆ, தன்னுணர்வோடு இருக்கோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்ம கோபத்தை கட்டுப்பாட்டோட வெளிப்படுத்தலாம். மற்றவர்கள் மனமும் புண்படாமல், நாமே பின்னாடி வருத்தப்படும் அளவிலும் இல்லாமல். இது முதல் விதம்.

குறிப்பா குழந்தைகளிடம், நிஜமாவே கோபப்படக் கூடாது; ஆனா கோபமா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். குழந்தைகளிடம்னு இல்லை, பல சந்தர்ப்பங்களுக்கும் அது பொருந்தும். உதாரணத்துக்கு, சில பேர் சாதுவா இருப்பாங்க, எல்லாத்துக்கும் சரி சரின்னு போவாங்க. மொத்தத்தில் ‘பிழைக்கத் தெரியாதவங்களா’ இருப்பாங்க (என்னை மாதிரி :). அவங்களை மற்ற ‘சாமர்த்தியசாலிகள்’ advantage எடுத்துக்க வாய்ப்பிருக்கு. அந்த மாதிரி நேரங்களில் கோபமா இருப்பது மாதிரி காட்டிக்கிறது, தற்காப்புக்கு உதவும். இது இரண்டாவது விதம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன இந்தக் கதையைப் படிச்சா, இது சுலபமா புரியும்…

ஒரு காட்டுக்குள்ள ஒரு பொல்லாத பாம்பு இருந்துச்சு. யாரைப் பாத்தாலும் கடிச்சிரும். அந்த காடு வழியா போறதுக்கு பசங்கள்லாம் ரொம்ப பயப்படுவாங்க. அப்ப ஒரு நாள், ஒரு சாது அந்த காடு வழியா வந்தாரு. அதைப் பார்த்த பசங்க அவர்கிட்ட ஓடி வந்து, “அங்கே போகாதீங்க சாமீ. ஒரு பொல்லாத பாம்பு இருக்கு, அது உங்களைக் கடிச்சாலும் கடிச்சிரும்’னு சொன்னாங்க. அவர் அதைக் கண்டுக்காம, நடந்துகிட்டே இருந்தாரு. அவர்கிட்டதான் மந்திர சக்தியெல்லாம் இருக்கே. அந்த பாம்பு, அவரைப் பார்த்ததும் கடிக்க வந்திருச்சு. உடனே அவர் கண்ணை மூடிக்கிட்டு ஒரு மந்திரம் ஜெபிச்சார். அதுக்குக் கட்டுப்பட்டு, அதுவும் அடக்க ஒடுக்கமா அவர்கிட்ட வந்து நின்னுது.

‘நீ ஏன் இப்படி மக்களை பயப்படுத்தறே? உனக்கு நான் மந்திரோபதேசம் செய்யறேன். அதை நீ தினமும் பயிற்சி செய்தா, ‘நல்ல’ பாம்பா மாறிடுவே’, அப்படின்னு சொல்லி, அதுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். பாம்பும், பணிவா அவரை வணங்கி அதைக் கேட்டுக்கிச்சு.

பிறகு அதை தினம் ஜெபிச்சிக்கிட்டே இருந்ததுல, அது ரொம்ப சாதுவான பாம்பாயிடுச்சு. அதைத் தெரிஞ்சுக்கிட்ட பசங்கள்லாம், இப்ப அதுகிட்ட பயமே இல்லாமப் போனதோட, மேற்கொண்டு அதை அடிச்சு துன்புறுத்த வேற ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பாம்புக்குதான் இப்ப பசங்களைப் பார்த்தாலே பயம்கிற அளவு ஆயிருச்சு.

ஒரு நாள், அந்த பாம்பை வாலைப் பிடிச்சு சுத்தி, குற்றுயிரும் குலைஉயிருமா நல்லா அடிச்சுப் போட்டுட்டாங்க. அதில் அந்த பாம்புக்கு நினைவே தப்பிப் போச்சு. ரொம்ப நேரம் கழிச்சு லேசா பிரக்ஞை வந்த போது, மெதுவா நகர்ந்து ஒரு வளைக்குள்ள போயிருச்சு. அதுல இருந்து பயந்துகிட்டு, இரை தேடக் கூட வெளியில் வராம, இப்பவோ அப்பவோன்னு இருந்தது.

அப்ப ஒரு நாள், அதே சாது அதே வழியா வந்தாரு. அங்கே இருந்த பசங்ககிட்ட பாம்பைப் பற்றி விசாரிச்சாரு. ‘அது எப்பவோ செத்துப் போச்சு’ன்னு சொன்னாங்க பசங்க. ஆனா அவர் அதை நம்பலை. மந்திரத்தோட சக்தியால அது சாகாதுன்னு அவருக்கு தெரிஞ்சிருந்தது. அவர் காட்டுக்குள்ள போயி, அதை கூப்பிட்டுப் பார்த்தார். குருநாதரோட குரலைக் கேட்டதால, அந்த பாம்பு மெல்ல வெளிய வந்து அவரை வணங்கிச்சு.

அதோட நிலைமையைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்ட சாது, ‘ஏன் இப்படி ஆயிட்டே?’ன்னு கேட்டாரு. பாம்புக்கு இதுக்குள்ள நடந்ததெல்லாம் மறந்து போயிருந்துச்சு. அதனால, ‘எனக்கு ஒண்ணும் இல்லையே சாமீ… நான் நல்லாத்தானே இருக்கேன்’ன்னு சொல்லுச்சு! சாது திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு, அதுக்கு லேசா நினைவு வந்தது. ‘பசங்க இப்படி பண்ணிட்டாங்க, ஆனா சின்னப் பிள்ளைங்கதானே தெரியாம பண்ணிட்டாங்க’ அப்படின்னு சமாதானம் வேற சொன்னது. அதுதான் இப்ப ‘நல்ல’ பாம்பா ஆயிருச்சே?

அதைக் கேட்ட சாது, ‘நான் உன்னை மற்றவர்களை கடிக்க வேண்டாம், துன்புறுத்த வேண்டாம்னு தானே சொன்னேன். உன்னை பிறர் துன்புறுத்தும் போது சீற வேண்டாம்னு சொல்லலையே? இவ்வளவு முட்டாளா இருக்கியே’ன்னு வருத்தப்பட்டாராம்.

ஒருத்தர் ஆன்மீகத்தில் ஈடுபட ஈடுபட, அவர் ‘சாது’வாக ஆகி விடுவார். மனநிலை சமன்பட்டுக்கிட்டே வரும்போது கோபம் போன்ற உணர்வுகள் குறைஞ்சிடறதும், அடியோட போயிடறதும், சகஜம். அந்த மாதிரி இருக்கவங்களை மற்றவங்க சுலபமா ஏமாத்த நிறைய வாய்ப்பிருக்கு. அதனாலதான் ஸ்ரீராமகிருஷ்ணர், “சாதுவா இருக்கலாம்; அதுக்காக முட்டாளா இருக்கணும்னு பொருள் இல்லை. தன்னைத்தானே காத்துக் கொள்ளத் தெரியணும்”, அப்படின்னு சொல்லுவார். அதை விளக்கத்தான் இந்தக் கதையைச் சொன்னார்.

தற்காப்பு கோபம்னா என்ன, ரௌத்திரம் பழகறதுன்னா என்ன, இதெல்லாம் பற்றி தெளிவா குழப்பிட்டேனா இப்போ?

ரௌத்திரம் பழகுங்க! சந்தோஷமா இருங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

பி.கு.: ஊருக்குப் போறேன். மறுபடியும் ஒரு மாசத்துக்கு உங்களுக்கு விடுமுறை, என் பதிவுகளிலிருந்து :) அதுக்குன்னு ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்! திரும்பவும் வருவேன்!

Sunday, April 1, 2012

உங்களுக்கும் இப்படியெல்லாம் தோணுமா?

மீபத்தில் ‘ரீடர்ஸ் டைஜஸ்டி’ல் ஒரு கட்டுரை படிச்சேன். “Are you nuts?” அப்படிங்கிறது தலைப்பு.

சிலருக்கு சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். சாதாரண பழக்கம்தான்னு இந்தப் பக்கமும் சேர்க்க முடியாது, பைத்தியம்னு அந்தப் பக்கமும் சேர்க்க முடியாது. அப்படி ரெண்டுங்கெட்டானா இருக்கும். அதைப் போல பழக்கங்கள் இருக்கவங்களுக்கு, தன் மேலேயே சந்தேகம் வரும் – “நான் பைத்தியமோ?” அப்படின்னு. அந்த மாதிரி ஆளுங்கல்லாம் தங்களோட வித்தியாசமான பழக்கங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு எழுதி இருக்காங்க. அவங்க, அதை மனோதத்துவ நிபுணர்களிடம் காண்பிச்சு, கருத்து கேட்டு, அவங்க நிஜமாவே மருத்துவ உதவியை நாடணுமா, இல்லை கண்டுக்க வேண்டிய அளவுக்கு அது ஆபத்தான பழக்கம் இல்லையா, அப்படின்னு சொல்லி இருக்காங்க.

உதாரணத்துக்கு, ஒரு பொண்ணுக்கு, எதையாவது வாசிக்கும் போது முடியை விரலில் சுற்றி சுற்றி விளையாடுகிற பழக்கம் இருக்காம். படிக்கும் போது மட்டும். இது நாமளே அடிக்கடி பார்க்கிற பழக்கம்தான்.

இன்னொருத்தங்களுக்கு கார் ஓட்டும் போது தனக்கு சரிக்குச் சரியா (parallel – ஆ) பக்கத்து lane-ல கார் வர்றதைத் தாங்கவே முடியாதாம். அந்தக் காருக்கு முன்னாடி இல்லாட்டி பின்னாடிதான் போகணுமாம்.

ஒருத்தருக்கு பழையது எதையுமே தூக்கிப் போட மனசே வராதாம்.

இப்படிப் பல பழக்கங்கள், கேள்விகள், அவற்றுக்கு நிபுணர்களின் பதில்கள்.

இன்னொண்ணுதான் ரொம்ப வேடிக்கையா இருந்தது. ஒரு பெண்ணுக்கு, டிராயர்ல நிறைய spoons இருக்கும் போது, அதில் இருந்து ஒண்ணே ஒண்ணு தேர்ந்தெடுக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டப்படுவாங்களாம்! அப்படியே ரொம்பக் கஷ்டப்பட்டு எப்படியோ எடுத்துட்டாங்கன்னு வைங்க, அப்புறம் அவங்க எடுக்காம விட்ட மற்ற spoons-க்காக வருத்தப்படுவாங்களாம்! இது எப்படி இருக்கு?

எனக்கும் சில விஷயங்கள் இந்த மாதிரி தோணும். (அச்சோ, ஸ்பூன் விஷயத்தைச் சொல்லலைங்க!) எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிடணும்? வயிற்றில் ஒரு zip இருந்தா எல்லாத்தையும் உள்ள போட்டு மூடிடாலாமேன்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போதே தோணியிருக்கு. வேறு சிலருக்கும் இதே மாதிரி தோணியிருக்குன்னு பிற்காலத்தில் தெரிஞ்சுக்கிட்டேன் :)

சில பேர் நம்ம பக்கத்தில் இருக்கும் போதே ரொம்ப ரொம்ப சத்தமா பேசுவாங்க. அந்தக்கால ரேடியோவில எல்லாம் திருகற மாதிரி volume பட்டன் இருக்குமே. அந்த மாதிரி கத்திப் பேசறவங்க தொண்டையில் ஒரு பட்டன் இருந்தா, வால்யூமைக் குறைக்கலாமேன்னு தோணும். அதே போல சிலர் மெதுவா பேசுவாங்க. அவங்களுக்கு வால்யூமை அதிகம் பண்ணனும். (ஹி..ஹி… எனக்கு சொல்லலை!)

சில பேர் மூச்சு விடக் கூட நேரம் எடுத்துக்காம, மத்தவங்களையும் பேச விடாம, நிறுத்தாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு ஒரு mute பட்டன் இருந்தா நல்லாருக்கும்!

தேவையில்லாம மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைச்சு, வம்பு பேசறவங்களோட மூக்கு, அவங்க வம்பு பேசப் பேச, பினோக்கியோவுக்கு மாதிரி நீ……ளமா வளந்தா எப்படி இருக்கும்!

வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது சில விஷயங்களை வேற மாதிரி செய்திருக்கலாம்னு தோணும். ஒரு rewind பட்டன் இருந்தா, rewind பண்ணிட்டு திரும்பி வேணுங்கிற இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமேன்னு தோணும். (ஆனா, உண்மையில் அப்படி இருந்தா இன்னும்தான் கஷ்டம்தான்னும் தோணுது!).

இதைப் பற்றிப் பேசும் போது ஆங்கில படம் ஒண்ணு நினைவு வருது. அந்த ஹீரோவுக்கு அப்படித்தான், ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி சம்பவங்களா நடக்கும். காலைல எழுந்திருக்கும்போதே அவனுக்கு தெரிஞ்சிருக்கும், இன்னிக்கு யார் யாரைப் பார்ப்போம், என்னென்ன சாப்பிடுவோம், என்னென்ன நடக்கும், இப்படி ஒவ்வொரு சின்ன விஷயம் கூட தெரியும். அவனுக்கு அப்படியே முடியைப் பிச்சுக்கலாம் போல இருக்கும். ஒரே வாழ்க்கையை, அதுவும் அடுத்த நிமிஷம் இன்னது நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்ச வாழ்க்கையை தினம் தினம் வாழ யாருக்குத்தான் பிடிக்கும்?

பிறகுதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியும். கண்ல தெரியற ஒவ்வொரு பிரச்சனையையும் அது வரைக்கும் கண்டுக்காம போயிக்கிட்டிருந்தவன், கொஞ்சம் நிதானிச்சு, தன்னைப் பற்றி மட்டும் யோசிக்கிறதை விட்டுட்டு, மற்றவங்களுக்கு உதவி செய்து, அவங்க பிரச்சனைகளை ஒவ்வொண்ணா தீர்த்து வைப்பான். பிறகு அவன் வாழ்க்கை பழையபடி ஆயிடும்.

இந்த மாதிரி சில ஆங்கிலப் படங்களில் கற்பனை அபாரமா இருக்கும். ரீவைண்ட்னு சொன்னதால நினைவு வந்தது.

நம்ம நாட்டைப் பற்றி நினைக்கும் போதும் ஆதங்கமா இருக்கும். எவ்வளவு குப்பைகள், நாடு முழுக்க. குப்பைன்னா கூட்டித் தள்ள முடியாத குப்பையைகளையும் சேர்த்துத்தான் சொல்றேன். கணினி மாதிரி இருந்தா, ctr+alt+del அமுக்கி, reboot பண்ணி, முதல்ல இருந்து சுத்தமா ஆரம்பிக்கலாமேன்னு தோணும்!

நேற்றுதான் எங்க ஊர்ல 10K ன்னு சொல்லி, மாரத்தான் ஓடறவங்க, நடக்கறவங்க, இவங்கல்லாம் கலந்துக்கற நிகழ்ச்சி. தோழிகளும், நானும், குடும்பத்தினரும், கலந்துகிட்டோம். கிட்டத்தட்ட 40000 பேராம். நம்மூர் திருவிழாக் கூட்டம் மாதிரி, எங்க பார்த்தாலும் தலைதான். நாங்க வந்த போது போக்குவரத்து (அதாங்க, சுத்தத் தமிழ்ல traffic!) ரொம்பவே அதிகமாயிடுச்சு. ரொம்ப நேரம் ஊர்ந்து வர வேண்டியதா இருந்தது மட்டுமில்லாம, காரை நிறுத்தவும் இடமே கிடைக்கலை! நேரம் வேற ஆகிக்கிட்டிருந்தது. அப்பதான், இந்த மாதிரி நேரங்கள்ல, அவசரத்துக்கு காரை மடிச்சு கைப்பையில் வச்சுக்கிட்டு போற மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு தோணுச்சு!

காரை parallel park பண்ண வேண்டியிருக்கும் போது, முன்னாடியும் பின்னாடியும் மெதுவா மெதுவா நகத்தி கஷ்டப்படாம, அதை அப்படியே தூக்கி வைக்க முடிஞ்சா எவ்வளவு சுலபம்னு என் தோழிக்கு தோணுமாம்.

எல்லாம் சரி, இதையெல்லாம் படிச்ச பிறகு உங்களுக்கு என்ன தோணுது? நாமே பரவாயில்லை போலருக்கேன்னு தோணுதா? ஹி…ஹி…

எல்லாரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

Sunday, March 25, 2012

பாவை வனம்



கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.

என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.

என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.

உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html

Sunday, March 18, 2012

அவ்யாஜ கருணா மூர்த்தி

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு?”

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?”

“ஊஹூம்”

“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.

“எனக்கு தர்றியா கண்ணா?” கையை நீட்டிக் கேட்கிறாள்.

“மாத்தேன் போ”

“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”

“ஊஹூம். தய மாத்தேன்!” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

“அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும் “தர மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, “இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது. அவர் சொன்ன மாதிரியே அச்சு அசலாக இருக்காது. நினைவிலிருந்து எழுதுகிறேன். கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.

“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

“அவ்யாஜ கருணா மூர்த்தி”. லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது. இதற்கு சுகிசிவம் அவர்கள் சொன்ன விளக்கம் தான் இதுவரை சொன்னது.

“வ்யாஜ” என்றால் காரணம். “அவ்யாஜ” என்றால் காரணமில்லாமல். “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். “நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.

எத்தனையோ செய்திகளைக் கேட்கிறோம், வாசிக்கிறோம், பார்க்கிறோம். ஆனால் சில செய்திகள் மட்டும் நினைவில் நின்று விடுகின்றன. அதைப் போலத்தான் சுகி.சிவம் அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்ட போதும். எங்கேயோ படித்த, கேட்ட கதைகளையும், செய்திகளையும், எப்படியோ கொண்டு வந்து பொருத்தமாக கோர்த்து விடுகிறார்! குறிப்பாக அன்னையின் இந்த நாமத்தைப் பற்றி விளக்கும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்கின்ற கதையை உதாரணமாகச் சொன்னார் பாருங்கள்… நானும்தான் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன், ஆனால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை! எனக்கு இந்த நாமத்தின் பொருள் அப்போது தெரியாதுதான்; தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் யோசிக்க வராது! ஹ்ம்… அதனால்தான் அவர் ‘சொல்லின் செல்வரா’க இருக்கிறார், நான் இப்படி இருக்கிறேன் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

Sunday, March 11, 2012

செல்லக் குட்டிப் பாப்பா!



குட்டிக் செல்லப் பாப்பா பார்!
கட்டி வெல்லப் பாப்பா பார்!
கிட்டச் சென்று தொட்டுப் பார்!
பட்டுப் போல இருக்கும் பார்!

கையைக் காலை உதைக்கும் பார்!
காந்தம் போல இழுக்கும் பார்!
பையப் பையப் பேசும் பார்!
பொக்கை வாயில் சிரிக்கும் பார்!

கையில் விரலைக் கொடுத்துப் பார்!
கெட்டி யாகப் பற்றும் பார்!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பார்!
குதூ கலமாய்ச் சிரிக்கும் பார்!

பசி எடுத்தால் அழுதிடும்!
உறக்கம் வந்தால் உறங்கிடும்!
கவலை ஏதும் இன்றியே
களிப் புடனே வாழ்ந்திடும்!

குழந்தை போல நீ இரு!
குறைகள் இன்றி வாழ்ந்திடு!
வெள்ளை உள்ளம் கொண்டிடு!
அள்ளி அன்பைத் தந்திடு!

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.happybabysite.com/